இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரி | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
Description
மருத்துவர் கிறீன் 1847 இல் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முதலாவது சத்திர சிகிச்சையால் பண்டிதர் முத்துத்தம்பி உயிர்பெற்றமை அன்று யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற சுதேச மருத்துவராக விளங்கிய இளையதம்பி அவர்களது மைந்தன் வைத்திலிங்கம் அவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தையும் சத்திரசிகிச்சை முறையையும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.
வட்டுக்கோட்டையில் மருத்துவப் பணியை ஆரம்பித்த மருத்துவர் கிறீன் அமெரிக்க மிசனரிகளது வேண்டுகோளை ஏற்று மானிப்பாய்க்குச் சென்று அங்கு தனது மருத்துவப் பணியைத் தொடர்கின்றார்.
யாழ்ப்பாணத்திலே மருத்துவ மற்றும் சத்திரசிச்சைக் கற்கைநெறியை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் கிறீன் மிகவும் ஆர்வமுடன் இருந்தார்.
கிறீன், யாழ்ப்பாணத்தில் 10,000 பேருக்கு ஒரு மருத்துவரையாவது நியமிப்பது அவசியம் என்று கருதினார். 1848 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மொத்த சனத்தொகை 3 இலட்சம். எனவே 30 மருத்துவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று விரும்பினார்.
அன்றைய காலப்பகுதியில் அமெரிக்காவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்பட்ட 3 வருட பாடத்திட்டத்தையே கிறீன் இங்கு மானிப்பாயில் 1848 இல் நிறுவிய இலங்கையின் முதலாவது மருத்துவக் கல்லூரியிலும் நடைமுறைப் படுத்தினார்.